O/L பெறுபேறுகளுக்கு முன்னர் பாடசாலைகளில் A/L வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி 

தற்போது நடைபெற்று வரும் 2023ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சைத் திணைக்களத்திற்கு சுமார் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுகின்றது. 

இந்த மூன்று மாத காலத்தில், மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து விலகியிருப்பது க.பொ.த உயர்தரக் கல்வியைப் பின்தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கு காரணமாக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இதனுடாக பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு , இம்மாதம் சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன், பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பது பொருத்தமானது என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதனுடாக மாணவர்களின் நேரத்தை திறம்பட நிர்வகிப்பதற்கும், ஆசிரியர்களுக்கு உயர்தர பாடத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு போதுமான நேரத்தை வழங்குவதற்கும் ஏற்றதாக அமையும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதன்படி, 2023ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன், பாடசாலைகளில் க.பொ.த உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

Social Share

Leave a Reply