கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்றைய தினம்(14.05) பரீட்சை நிலையத்திற்குச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போயுள்ளதாக கினிகத்தேனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த இரு மாணர்களின் உறவினர்களினால் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் இருவரும் நேற்று(14.05) காலை பரீட்சைக்கு தோற்றுவதற்காக அம்பகமுவ தேசிய பாடசாலை பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இரு மாணவர்களுள் ஒருவர் தனது பெற்றோருடன் பரீட்சை நிலையத்திற்கு வந்திருந்ததாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியில் உள்ள அக்ர ஓயா மற்றும் நாகஸ்தென்ன பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு மாணவிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு முன்னர், பரீட்சை நிலையத்திற்கு அருகில் குறித்த இரு மாணவர்களும் உரையாடிக் கொண்டிருந்ததாகவும் ஒரு சில மாணவர்கள் பார்த்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர், இரு மாணவர்களும் பாடசாலை சீருடையுடன் நாவலப்பிட்டிய பஸ் நிலையத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன மாணவிகளின் புகைப்படங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவிகளை கண்டறிவதற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.