நினைவேந்தல் தொடர்பில் அரசுக்கு பொது கொள்கை இல்லை? 

“நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசுக்கு இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்றிரவு தொலைபேசியில் கேட்டேன். மேலும்,  தனிப்பட்ட இல்லம் ஒன்றுக்கு தேடி சென்று இறந்தவர்களை நினைவில் ஏந்தி நிற்கும் தமிழ் பெண்களை கதற வைத்து, இழுத்து சென்று கைது செய்யும் அளவுக்கு, ஸ்ரீலங்கா பொலிசுக்கு அப்படி என்ன அவசர தேவை இருக்கிறது?” என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 

“புலிகள் இயக்கம் சட்டப்படி தடை செய்யப்பட்டது. அது சட்ட பிரச்சினை. அதுபற்றி நான் இங்கே பேச வரவில்லை. ஆனால், அந்த இயக்கத்தின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தங்கள் வீட்டில் கஞ்சி காய்ச்சி குடித்த மக்களை ஏன் தேடி போய் பொலிஸ் கைது செய்ய வேண்டும்? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்கள் இருந்தால் எப்போதும் கைது செய்யலாம் தானே. ஆகவே இதற்காக ஏன் விசேடமாக நீதிமன்ற ஆணையை கேட்டு பெற வேண்டும்? இது தெரியாமலா அந்த நீதிமன்றமும் தடை உத்தரவு தீர்ப்பு வழங்கியுள்ளது? இதில் இருக்கும் மர்மம் என்ன? நினைவேந்தல் தொடர்பில் ஒரு பொது கொள்கை ஏன் அரசாங்கத்துக்கு இல்லை? தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்கள் இல்லாமல் எவரும் தம் மறைந்த உறவுகளை நினைந்து நினைவேந்தல்களை நடத்தலாம் என அரசாங்கம் ஒரு பொது கொள்கையை அறிவித்தால் என்ன?” என்றும் மனோ கணேசன் மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பியதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“இல்லை, அவர்கள் பொலிஸ் உடன் முரண் பட்டுள்ளார்கள். அதனால்தான் கைது. சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸிடம் கூறி விட்டேன். பிணை கோரிக்கையை எதிர்க்க வேண்டாம் என பொலிசுக்கு, சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் கூறி உள்ளார்.  ஆகவே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க, அவசர, அவசரமாக பதில் அளித்துள்ளார். 

“பொலிஸ் அந்த வேளையில் அவர்களது வீட்டுக்கு சென்று கைது செய்ய முயன்றதால்தானே முரண்பாடு ஏற்பட்டது? முதலில் பொலிஸ் ஏன் தடை உத்தரவு பெற்றார்கள்? அரசாங்கம் சொல்லியா அதை அவர்கள் கிழக்கு மாகாணத்தில் செய்துள்ளார்கள்? என்று திருப்பி கேட்டே போது, “அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என்று மட்டுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர, அவசரமாக பதில் கூறியுள்ளாரே தவிர, “நினைவேந்தல் தொடர்பில் பொது கொள்கை இல்லையா அறிவிக்க முடியாதா?” என்ற எனது கேள்விகளுக்கு ஜனாதிபதி பதில் அளிக்கவில்லை, என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply