தமிழின அழிப்புக்கு இலங்கை அரசுக்கு, சர்வதேசமும் உதவியது – சார்ள்ஸ் MP

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் தமிழின அழிப்புக்கு இலங்கை அரசுக்கு , சர்வதேசமும் உதவியது என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (18/05)காலை, தழிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் போதே அந்தக் கட்சியின் மன்னார் கிளைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எம் தமிழினத்தைக் கொன்றொழிக்க பல வல்லரசு நாடுகள் ஒன்றிணைந்து ஆட்பலம், மற்றும் ஆயுத பலம் என்பவற்றை சிங்கள பேரினவாதத்திற்கு வழங்கியது.
அக்காலப் பகுதியில், இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில், ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப் பட்டும், காணாமலும் ஆக்கப்பட்டனர்.

யுத்தம் முடிந்து 15 வருடங்கள் ஆகியும் தொடர்ந்தும் தமிழினம் அழிக்கப்பட்டு வருகிற நிலையில் சர்வதேச நாடுகள் இன்றுவரை மௌனம் காத்து வருகின்றமை தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கின்றது.

சர்வதேசமானது தனது கடந்தகாலத் தவறைத் திருத்திக்கொள்ளுமுகமாகத் தமிழர்களுக்கு இந்நாட்டில் இறைமையுடன் வாழும் வகையில் ஒரு அரசியல் யாப்பு மாற்றம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதைச் சர்வதேசத்துக்கு உணர்த்துமுகமாகவும், இதே நாளில்,முள்ளிவாய்க்காலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட எம் உறவுகளை நினைவு கூரும் முகமாகவும் நாங்கள் இந்த நிகழ்வை முன்னெடுக்கின்றோம். என்று கூறினார்.

இதேவேளை தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வீ. எஸ் சிவகரன் தலைமையிலும் மன்னாரில் முள்ளிவாய்க்கால்,நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு இறந்த உறவுகளுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு,
பொது மக்களுக்கு “முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி”வழங்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
குறித்த நிகழ்வில்,பொதுச்சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கிவைக்கப்பட்டது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply