LPL தொடரில் சூதாட்டம்? – நிராகரித்த ஶ்ரீ லங்கா கிரிக்கெட்  

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் மற்றும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏனைய அதிகாரிகள் ஆட்ட நிர்ணயம் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் மறுத்துள்ளது.    

லங்கா பிரீமியர் லீக் போட்டிகளுக்கான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்புப் பிரிவினரின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுவதாகவும், அண்மையில் நடைபெற்ற எல்.பி.எல் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தின் போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்புப் பிரிவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்போது, தம்புள்ளை அணியின் உரிமையாளர்களில் ஒருவரின் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்பு பிரிவின் அதிகாரிகளினால் விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே குறித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையின் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் வலியுறுத்தியுள்ளதுடன், ஊழல் மற்றும் தவறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும் உள்நாட்டிலுள்ள அதிகாரிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. 

Social Share

Leave a Reply