இலங்கையில் Starlink இணையச் சேவையின் முன்பதிவு ஆரம்பம் 

எலோன் மஸ்க்கின் Starlink இணையச் சேவையை தற்போது இலங்கையில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இலங்கையில் உள்ள மக்கள் 9 அமெரிக்க டொலர்களுக்கு Starlink இணையச் சேவையை  முன்பதிவு செய்ய முடியும். இந்த முன்பதிவு தொகையை முழுமையாக மீளப் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் Starlink இணையச் சேவையை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் நிலுவையில் உள்ள நிலையில், இவ்வருடம் குறித்த சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.    

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் Starlink இன் தலைவர் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்ந்து Starlink இணைய சேவை தற்போது முன்பதிவை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் டினூக் கொலம்பகே வெளியிட்டுள்ள X தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இலங்கையில் உள்ள தொழில்நுட்ப தொழில்முனைவோருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவதற்கு முன்னரே, இலங்கையில் Starlink இணையச் சேவையின் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ஜனாதிபதி – எலோன் மஸ்க் இடையிலான சந்திப்பு 

Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று எலோன் மஸ்க் இந்த வருடம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக முன்னதாகவே செய்திகள் வெளியாகியிருந்தது. 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்விற்காக இந்தோனேசியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு  Elon Muskகை சந்தித்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உலக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். 

இதன்போது, Starlink இணைய சேவை செயன்முறையில் இணைவதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதுடன், இலங்கையின் கிராமங்களில் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான இணைய சேவை உதவியாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார். 

பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் இணைய சேவை 

இதேவேளை, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகர்களின் முதலீடுகளை ஈர்க்க முடிந்தால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும் என காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(27.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 

“Starlink” போன்ற திட்டத்தில் இணைவதன் மூலம் நாட்டின் பின்னடைந்த பிரதேசங்களுக்கு இணைய வசதிகளை பிரச்சினையின்றி வழங்க முடியும் எனவும் சுற்றுலாத்துறை உட்பட பொருளாதாரத்திற்கு பயன்படும் பல துறைகளின் வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதனுடாக பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் சலுகைக் கட்டண முறைகளின் கீழ் இணைய வசதிகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்காலத்தில் SpaceX நிறுவனத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன மேலும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது இலங்கையில் Starlink இணையச் சேவையை உத்தியோகபூர்வ இணைய தளத்தினுடாக முன்பதிவு செய்து கொள்ளவதற்கான வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply