சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு 

சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(28.05) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை அடுத்த வாரம் வரை ஒத்திவைத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(27.05) இடம்பெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் வைத்தியர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு கோரி சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் இன்று(28.05) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருந்தனர். 

இருப்பினும், நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக குறித்த தீர்மானத்தை அடுத்த வாரம் வரை ஒத்திவைத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் வைத்தியர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் முழுநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 30ம் திகதி பணிப்புறக்கணிப்பிற்கான திகதி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

72 சுகாதார தொழிற்சங்கங்களை சேர்ந்த  சுகாதார ஊழியர்கள் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். 

Social Share

Leave a Reply