ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பிற்கு சிலர் ஆதரவு தர மறுப்பு 

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(30.05) முதல் இரு தினங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளனர்.

பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்குமாறு கோரி இன்று(30) முதல் இரண்டு நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தேசிய ஆசிரியர் சக்தி தீர்மானித்துள்ளது. கடந்த 27 வருடங்களாக சம்பள முரண்பாட்டினை தீர்க்குமாறு கோரி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதாக தேசிய ஆசிரியர் சக்தியின் ஊடகப் பேச்சாளர் அமுது பண்டார ஆங்கில ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். 

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு எதிர்வரும் பொசன் போய தினமான ஜூன் 21ம் திகதிக்கு முன்னர் தீர்வுகளை வழங்குமாறு  ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சருக்கு தேசிய ஆசிரியர் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. தீர்வுகள் வழங்கப்படவில்லை என்றால் உரிய நபர்களின் அரசியல் எதிர்க்காலத்தை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் பலத்தை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை எனவும் தேசிய ஆசிரியர் சக்தியின் ஊடகப் பேச்சாளர் அமுது பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.   

இந்நிலையில், தேசிய ஆசிரியர் சக்தி முன்னெடுக்கும் இந்த பணிப்புறக்கணிப்பிற்கு, இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். 

இதேவேளை, நாளை(30.05) மற்றும் நாளை மறுதினங்களில் பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply