நமது நாட்டில் உப்பு நீர் மற்றும் நன்னீர் மீன்பிடி தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% பங்களிக்கிறது. நாடு முழுவதும் கடலால் சூழப்பட்டு, சர்வதேச சட்டத்தின்படி, கடற்கரையிலிருந்து 200 கடல் மைல் தொலைவு, அதாவது கி.மீ. 370 கடல் பரப்பு நமது நாட்டிற்கு சொந்தமானதாகும். இது சதுர கி.மீற்றரில் ஐந்து இலட்சத்து பத்தாயிரம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் நல்ல நல்ல வார்த்தைகளை பேசுவார்கள். Blue Economy, நீலப் பொருளாதாரம் என்று நாம் பேசிக் கொண்டிருந்தாலும், இந்த கடல் வளத்தை நிலையான முறையில் பயன்படுத்தி நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க எம்மால் முடியாதுபோயுள்ளது. கடலால் சூழப்பட்ட நாடாக இருந்தாலும் அதை சாதகமாக பயன்படுத்த முடியாமல் இருப்பதற்கு நாடாக நாம் வெட்கப்பட வேண்டும். மீன் உணவுக்கான நமது தேவையில் நாம் இன்னும் தன்னிறைவு பெறவில்லை. நாம் தற்போதும் பல்வேறு வகையான மீன்களை இறக்குமதி செய்து வருகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மீன் வளத்தால் நாட்டை வளப்படுத்த வேண்டும். மீன் வளத்தை பயன்படுத்தி உற்பத்தி சார் ஏற்றுமதியையும் நாம் முன்னெடுக்க வேண்டும். கடலால் சூழப்பட்ட நம் நாடு இந்த வாய்ப்பை இழந்து விட்டது.
உப்புநீர் மட்டுமல்ல, நன்னீர் மீன்பிடித் தொழிலையும் மேம்படுத்துவதற்கான பல வாய்ப்புகள் தவற விடப்பட்டுள்ளதால், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நீலப் பொருளாதார கொள்கை பிரயோக ரீதியாக நடைமுறைப்படுத்துவோம். புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், அரச மற்றும் தனியார் கூட்டாண்மை திட்டத்தின் மூலமும், நிலையான முறையில் நாட்டின் மேம்பாட்டுக்கு மேலும் பங்களிப்பை வழங்கும் திட்டமாக இதை அணுகுவோம். புதிய பிரவேசத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
ஏறக்குறைய 12 இலட்சம் மீனவ சமூகத்தினர் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 3 இலட்சம் மீனவ குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடியதாகவும், அதிக வருமானம் பெறும் விதமாகவும் வழிவகை செய்து தரப்படும். இதன் மூலம் இத்துறை ஊடாக நாட்டுக்கு கூடிய நன்மைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 208 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, நீர்கொழும்பு, கெப்பும்கொட புனித அந்தோனி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 29 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாடசாலை நடன குழுவினருக்கு ஆடைகளைப் பெற்றுக் கொள்ளும் முகமாக ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவின் தந்தையான முன்னாள் அமைச்சர் வைத்தியர் ஜயலத் ஜயவர்தனவின் 11 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சி இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.