பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் நன்கொடைகளும் பூரண வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சகல அரச கொடுக்கல் வாங்கள்களும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தாலும் சரி, ஜனாதிபதியாக இருந்தாலும் சரி, பிரதமராக இருந்தாலும் சரி, திருட்டு, இலஞ்சம், ஊழல், மோசடி ஆகியவற்றுக்கு இடமில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கையாக பொழுதைக் கழிப்பதை விட மிகவும் கடின முயற்சியில் ஈடுபட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டி வரும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சில சமயங்களில் தாராள சலுகைகள், வரப்பிரசாதங்கள், பதவிகள், பொருளாதார நலன்கள் கிடைக்காதபோது பல்வேறு நபர்கள் பல்வேறு முடிவுகளை எடுக்கலாம். அது எமக்கு பொருட்டல்ல. தற்போது மதுபான உரிமப்பத்திரம் வழங்க அரசியல் கட்சிகளை தேடி அலையும் தரப்பினரும் கூட உள்ளனர். அவர்கள் தங்கள் சுய மரியாதை மற்றும் கௌரவம் குறித்து சிந்திக்காமல் அற்ப அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அற்ப அரசியலால் தான் இந்நாடு இந்தளவு வீழ்ச்சியடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் இருந்து விடுபட அனைவரும் கைகோர்த்து பெரும் அபிவிருத்தி புரட்சிக்கு தங்களது அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை நல்க முன்வர வேண்டும். அரசியல்வாதிகளின் பின்னால் சென்று அலையாமல், மக்கள் சொந்த காலில் நின்று, தன்னம்பிக்கையுடன் அபிமானத்துடன் வாழ சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 211 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, வலஸ்முல்ல, மெதகம்கொட மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 30 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.