சொந்த மண்ணில் வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் 

டி20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பபுவா நியூ கினியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. கயானாவில் இன்று(01.06) நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூ கினியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பபுவா நியூ கினியா அணி சார்பில் Sese Bau 50 ஓட்டங்களையும், கிப்ளின் டோரிகா 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரசல், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டனர். 

137 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 42 ஓட்டங்களையும், பிராண்டன் கிங் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பபுவா நியூ கினியா அணி சார்பில் பந்துவீச்சில் அசாட் வலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோஸ்டன் சேஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, டி20 உலகக் கிண்ணத் தொடரின் மேலும் இரண்டு போட்டிகள் நாளை(03.06) நடைபெறவுள்ளன. பார்படாஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் நமிபியா மற்றும் ஓமான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கை நேரப்படி காலை 6.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி பங்குபற்றும் முதலாவது போட்டியும் நாளை நடைபெறவுள்ளது. நியூயார்க்கில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இலங்கை அணி தென்னாப்பிரிக்கா அணியை எதிர்க்கொள்ளவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 8.00 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply