தேர்தல் முடிவுகள்: பாஜக முன்னிலை, காங்கிரசுக்கும் வாய்ப்பு

இந்தியாவில் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று (04.06) காலை 8 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பகல் 1.00 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 296 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. ஏனைய கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இதன்போது, பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகின்ற போதும், கடும் நெருக்கடியுடன் கூடிய வெற்றியையே பெறும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகின்றது. 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. 

80 மக்களவை தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசம் மக்களவை தேர்தல் வெற்றியை உறுதி செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தேர்தலுக்குப் பின்னரான கருத்துக் கணிப்புகளில் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக 70க்கு அதிகமான இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி பாஜகவுக்கு கடும் சவால் விடுத்து வருகின்றது.

Social Share

Leave a Reply