மின்சார சபை சட்டமூலம் அரசியலமைப்புக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு 

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்ட மூலத்திற்கு எதிரான மனு மீதான விசாரணையின் போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சபாநாயகரால் பாராளுமன்றத்தில் இன்று(06.04) சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே சட்டமூலம் நிறைவேற்றப்பட​ வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், அரசியலமைப்பிற்கு முரணதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள சரத்துக்களை  திருத்தம் செய்வதன் ஊடாக மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள முடியும். 

இந்நிலையில், பாராளுமன்றத்திலும்  மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினரிடையே அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தார். 

மேலும், சட்டமூலத்தை துறைசார் கண்காணிப்பு குழுவில் சமர்ப்பிப்பதை தாமதப்படுத்துமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்‌ஷமன் கிரியெல்லவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கமைய சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்படும் என உறுதியளித்தார்.

Social Share

Leave a Reply