நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்வடைந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்குகளுக்காக 25,000 ரூபாய் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று(05.06) தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவின் கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சீரற்ற வானிலையால் இதுவரையில் 71 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் 93,770 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மதிப்பிடும் பணி நிறைவடைந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.