காணொளிகளை பகிரும் டிக்டோக்(TikTok) செயலியில் உள்ள சில முக்கிய நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் கணக்குகளை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சர்வதேச செய்தி ஊடகமான CNN உட்பட பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் கணக்குகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக டிக்டோக் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
CNN ஊடகத்தின் டிக்டோக் கணக்கை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கணக்கினை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக CNNஉடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் டிக்டோக் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். குறைந்த எண்ணிக்கையிலான டிக்டோக் பயனாளர்களே சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட கணக்கு உரிமையாளர்களுடன் டிக்டோக் கணக்குகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டிக்டோக் செயலியின் தாய் நிறுவனமான ByteDance தற்போது நீதிமன்றங்களில் பல்வேறு சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் டிக்டோக் செயலியை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் அல்லது செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் நிலை காணப்படுகின்றது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சீன நிறுவனமான ByteDance உரிமை நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இருப்பினும் டிக்டோக் செயலியை பயன்படுத்தும் அமெரிக்கா பயனாளர்களின் தகவல்களை சீன அரசாங்கத்திற்கு வழங்குவதில்லை எனவும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் டிக்டோக் தெரிவித்து வந்த நிலையில், தற்போது முக்கிய நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் டிக்டோக் கணக்குகளை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.