தீர்வு இல்லையென்றா மீண்டும் வேலை நிறுத்தம் – தபால் தொழிற்சங்கம் அறிவிப்பு 

தபால் ஊழியர்கள் முன்னெடுத்த 24 மணித்தியால வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, நிதியமைச்சிடமிருந்து சாதகமான பதில் வழங்கப்படவில்லையென்றால், எதிர்வரும் 24ம் திகதி மீண்டும் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. 

தபால் ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் கடந்த 13ம் திகதி இரவுடன் நிறைவு வந்ததாகவும், இதன்போது நிதி அமைச்சின் மேலதிக செயலாளருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

இந்த கலந்துரையாடலின் போது தபால் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிர்ச்சினைகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் பதில் வழங்கப்படும் என நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் உறுதியளித்ததாகவும், இருப்பினும் அவர் வாய்மொழி மூலமாகவே இதனை தெரிவித்தமையினால் அதனை முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எதிர்வரும் 24ம் திகதிக்குள் தாம் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் மற்றுமொரு வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 

மேலும், தபால் சேவையில் நிலவும் 6000க்கு மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புமாறும் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், 2018ம் ஆண்டிலிருந்து தபால் துறையில் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply