டி20 உலகக் கிண்ணத் தொடரில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், அன்டிகாவில் இன்று(16.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நமீபியா அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. போட்டியின் ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி புரூக் 47 ஓட்டங்களையும், ஜோனி பெய்ஸ்ட்ரோ 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நமீபியா அணி சார்பில் பந்து வீச்சில் ரூபன் டிரம்பெல்மேன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
DLS முறைப்படி 126 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. நமீபியா அணி சார்பில் மைக்கேல் 33 ஓட்டங்களையும், டேவிட் விசே 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ஆர்ச்சர், கிரிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இதன்படி, இந்த போட்டியில் இங்கிலாந்து அணி DLS முறைப்படி 41 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் தெரிவு செய்யப்பட்டார்.
‘B’ குழாமில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி பங்குபற்றிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றியீட்டி 5 புள்ளிகளுடன் தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ளது. இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் அவுஸ்ரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்தே, இங்கிலாந்து அணியின் சூப்பர் 8 வாய்ப்பு உறுதி செய்யப்படும். ஸ்கொட்லாந்து அணியும் 5 புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாம் இடத்திலுள்ளது. அவுஸ்ரேலியா அணி முன்னதாகவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.