தமிழகத்தை உருக்கிய கள்ளச்சாராய விவகாரம்- 42 பேர் பலி

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி – கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட வைத்தியசாலைகளில் 100 இற்கும் மேற்பட்டோர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜிப்மர் வைத்தியசாலை 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

தற்போது, தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறிச்சி அரச வைத்தியசாலைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலை தொடர்பில் அறிந்துள்ளார் . மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் குறித்தும் விஜய் கேட்டறிந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கருணாபுரம் கிராமத்திற்கும் விஜய் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், நிர்வாகத் திறனற்ற முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக சார்பில் எதிர்வரும்24ஆம் திகதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply