தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கும், இலங்கை மகளிர் அணிக்கு இடையிலான டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி வெற்றியீட்டியதன் ஊடாக தொடரை வென்றது.

ஹம்பாந்தோட்டையில் இன்று(28.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில், அணித் தலைவி சமரி அத்தபத்து 38 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம 28 ஓட்டங்களையும், கவிஷா டில்ஹாரி 26 ஓட்டங்கைளயும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்து வீச்சில் அபி பிளெட்சர், ஆலியா அலென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

142 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹெய்லி மெத்தியுஸ் 49 ஓட்டங்களையும், ஷிமைன் காம்பல் 41 ஓட்டங்களையும், ஸ்டெபனி டெய்லர் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் கவ்யா கவிந்தி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற ரீதியில் கைப்பற்றியது. போட்டியின் ஆட்ட நாயகியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷிமைன் காம்பலும், தொடரின் ஆட்ட நாயகியாக மேற்கிந்திய தீவுகள் அணி தலைவி ஹெய்லி மெத்தியுசும் தெரிவு செய்யப்பட்டனர். 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை இலங்கை மகளிர் அணி 3-0 என்ற ரீதியில் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரை மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி கைப்பற்றிக் கொண்டது. 

Social Share

Leave a Reply