சம்பந்தனின் மறைவுக்கு சுப்பையா ஆனந்தகுமார் இரங்கல்

இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும். அரசியல் தீர்வை பெறுவதற்காக அறவழியிலும், இராஜதந்திர வழியிலும் அவர் முன்னெடுத்த செயற்பாடுகளை ஒருபோதும் மறக்க முடியாது என ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார். 

இரா. சம்பந்தனின் மறைவு தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“ 1977ம் ஆண்டு தனது பாராளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த இரா. சம்பந்தன், பாராளுமன்றத்துக்குள்ளும், பொது வெளியிலும் தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்தார். நோய்வாய் பட்ட பின்னர்கூட இராஜதந்திர சந்திப்புகளில் அவர் ஈடுபட்டு வந்ததை காணமுடிந்தது. அந்தளவுக்கு தம் சமூகம்மீது பற்று வைத்திருந்த தலைவர் அவர் என்பதையே அது எடுத்துகாட்டுகின்றது. 

இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்த இரண்டாவது தமிழ்த் தலைவர் என்ற புகழும் அவரை சாரும். எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலகட்டத்திலும் எப்படியாவது இனப்பிரச்சினைக்கு தீர்வை கண்டுவிட வேண்டும் என போராடியவர் அவர்.

என்றும் வன்முறை வழியை அவர் ஆதரித்தது கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைய முற்பட்டார். 

அதற்கான வழிமுறைகளை ஊக்குவித்தார். சலுகைகளுக்காக கொள்கைகளை காட்டிக்கொடுத்தது கிடையாது. தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் பெரிதும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக சம்பந்தன் ஐயா திகழ்ந்தார்.

அவரின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply