கண்டி நீதிமன்றத்தில் பதற்றம் 

கண்டி நீதிமன்றத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பினால், நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

கண்டி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் காணப்படுவதாக, பொலிஸ் அவசர தொலைபேசி எண் 119க்கு அடையாளம் தெரியாத நபரொருவரினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.   

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கண்டி நீதிமன்றத்தின் அனைத்து செயற்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இன்று(07.02) காலை 10.00 மணியளவில் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரால் நீதிமன்ற வளாகம் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, எந்தவொரு நபர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் மறு அறிவித்தல் வரை கண்டி நீதிமன்ற வளாகத்திற்கு பிரவேசிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

வெடிகுண்டு அச்சுறுத்தல் காணப்படுவதாக போலியான தகவல் வழங்கப்பட்டிருப்பின், குறித்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு போலியான தகவலை வழங்கியவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Social Share

Leave a Reply