LPL – போராடி வென்றது யாழ் அணி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் மூன்றாம் நாளான இன்று(03.07) ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் நிறைவுக்கு வந்துள்ளது. இந்தப் போட்டியில் மிக அபாரமான வெற்றியை யாழ் அணி பெற்றுள்ளது. தம்புள்ளை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

192 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய யாழ் அணி ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தது. 06 ஓட்டங்களை பெற்ற வேளையில் குஷல் மென்டிஸ் ஆட்டமிழந்தார். அதிரடியாக துடுப்பாடிய பத்தும் நிஷங்க 27(18) ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ரிலி ரொசவ் 01 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை ஏற்படுத்தி அணியை மீது எடுத்தனர். வெற்றி பெற முடியாது என்ற நிலையில் காணப்பட்ட அணியை வெற்றி வாய்ப்புள்ள அணியாக மாற்றினார்கள். நிமேஷ் விமுக்தியின் 15 ஆவது ஓவரில் சரித் அசலங்க நான்கு 6 ஓட்டங்களை அடித்து தாக்கியிருந்தார்.

சரித் அசலங்க வெற்றியை அண்மித்த நிலையில் 50(36) ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி வரை அதிரடி நிகழ்திய அவிஷ்க பெர்னாண்டோ 80(34) ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். இருவரது ஆட்டமிழப்பும் யாழ் அணியின் வெற்றியை கேள்விக்குறியாக்கியது. தனஞ்சய டி சில்வா ரன் அவுட் முறையில் 09 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டி இறுக்கமானது.

இறுதியில் 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து ஜப்னா கிங்ஸ் அணி 196 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் மொஹமட் நபி ஓட்டங்களை அதிகம் வழங்கமால் இறுக்கமாக பந்துவீசி 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் துசார 04 ஓவர்கள் பந்துவீசி 24 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டை கைப்பற்றினார். முஸ்டபைசூர் ரஹ்மான் 04 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்டை கைப்பற்றினார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

தம்புள்ளை சிக்சேர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக 9(11) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, குஷல் ஜனித் பெரேராவுடன் இணைந்த நுவனிது பெர்னாண்டோ ஜோடி இணைப்பாட்டமாக 108 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

நுவனிது பெர்னாண்டோ 40(35) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இறுதி வரை அதிரடியாக துடுப்பெடுத்தாடிய குஷல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் 102(52) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மார்க் சப்மன் ஆட்டமிழக்காமல் 33(23) ஓட்டங்களை பெற்றுக் கொள்ள தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 191 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஈழத்தில் ஆரம்பத்தில் குஷல் பெரேரா வாங்கப்படாத நிலையிலேயே தம்புள்ளை அணி அண்மையில் அவரை ஒப்பந்தம் செய்தது.

ஜப்னா கிங்ஸ் அணி சார்பில் பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா மாத்திரம் 4 ஓவர்களுக்கு 25 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். ஏனைய வீரர்கள் விக்கெட்டுக்களை கைப்பற்றாததுடன் அதிகளவான ஓட்டங்களையும் வழங்கியிருந்தனர். இன்றும் வியாஸ்காந்தின் பந்துவீச்சு சரியாக அமையவில்லை.

Social Share

Leave a Reply