ஐரோப்பா கிண்ணம் அரை இறுதி அணிகள்

ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரின் காலிறுதிப் போட்டிகள் நேற்றோடு நிறைவடைந்துள்ளன. காலிறுதிப் போட்டிகளில் ஸ்பெய்ன், இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளன. சகல காலிறுதிப் போட்டிகளும் மிகவும் கடுமையாக விறு விறுப்பாக இருந்தன.

நேற்று(06.07) நடைபெற்ற நெதர்லாந்து, துருக்கி அணிகளுக்கிடையிலான போட்டியில் நெதர்லாந்து அணி 2-1 என வெற்றி பெற்றது. அகைடின் 35 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் மூலமாக துருக்கி அணி முன்னிலை பெற்றது. 70 ஆவது நிமிடத்தில் டி ரிஜ் சமநிலை கோலை அடித்தார். 76 ஆவது நிமிடத்தில் துருக்கி அணியின் சொந்த கோல் காரணமாக நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

இங்கிலாந்து, சுவிற்சலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என சமநிலையில் நிறைவடைந்தது. சமநிலை முடிப்பு பனால்டி உதைகளில் 5-3 என இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. சுவிற்சலாந்து அணி சார்பாக எம்போலோ 75 ஆவது நிமிடத்தில் கோலை அடித்தார். 5 நிமிடத்தில் இங்கிலாந்து அணி சார்பாக சாகா கோலை அடித்து போட்டியினை சமன் செய்தார்.

போர்த்துக்கல், பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கோல்களின்றி கடும் விறு விறுப்போடு நிறைவுக்கு வந்தது. சமநிலை முடிப்பு பனால்டி உதைகளில் 5-3 என பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஜேர்மனி, ஸ்பெய்ன் அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில், போட்டியை நடாத்தும் ஜேர்மனி அணி தோல்வியுற்று வெளியேறியது. இறுதிப் போட்டியில் சந்திக்க வேண்டிய இரு அணிகள் காலிறுதிப் போட்டியில் சந்தித்துக் கொண்டன. தோல்விகளை சந்திக்காத இரு அணிகளாக இந்த அணிகள் மோதின. விறு விறுப்பான போட்டியில் 51 ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் ஒல்மோ முதல் கோலை இட்டார். கடுமையாக போராடிய ஜேர்மனி அணி 89 ஆவது நிமிடத்தில் வெர்ட்ஸ் அடித்த கோல் மூலமாக சமநிலை செய்தது. மேலதிக நேரம் நிறைவடைய 5 நிமிடம் மீதமிருந்த வேளையில் ஸ்பெய்ன் வீரர் மெரினா அடித்த கோல் மூலமாக ஸ்பெய்ன் அணி வெற்றியினை தனதாக்கி அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

ஸ்பெய்ன், பிரான்ஸ் அணிகளுக்கிடையிலான அரை இறுதிப் போட்டி 09 ஆம் திகதி இரவு(இலங்கை நேரப்பபடி 10 ஆம் திகதி அதிகாலை 12.30) இற்கு நடைபெறவுள்ளது. மறுநாள் அதே நேரத்துக்கு இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply