இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் சமநிலையடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியதன் ஊடாக தொடர் 1-1 என்ற ரீதியில் சமநிலையிலுள்ளது.
நேற்று(06.07) நடைபெற்ற தொடரின் முதலாவது போட்டியின் போது தடுமாற்றத்தை எதிர்நோக்கிய இந்திய துடுப்பாட்ட வீரர்கள், இன்றைய(07.07) போட்டியின் போது அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சிம்பாப்வே, ஹராரேவில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 234 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா தனது கன்னி சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அபிஷேக் சர்மா 100(47) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், ருத்துராஜ் கெய்க்வாட் 77(47) ஓட்டங்களையும், ரிங்கு சிங் 48(22) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
235 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. சிம்பாப்வே அணி சார்பில் வெஸ்லி மாதேவேரே 43(39) ஓட்டங்களையும், லூக் ஜாங்வே 33(26) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, இந்திய அணி 100 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் அபிஷேக் சர்மா தெரிவு செய்யப்பட்டார்.
இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் தீர்மானமிக்க இறுதிப் போட்டி எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ளது.