ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று(08.07) உத்தரவிட்டுள்ளது.
2019ம் ஆண்டிலும் இந்த விடயம் தொடர்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளின் அடிப்படையிலேயே இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, இந்த மனு மீதான விசாரணையை முன் கொண்டு செல்ல போதுமான காரணிகள் இல்லை என ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருட காலம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, மூர்து பெர்னாண்டோ, ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.