லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (10.07) ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தம்புள்ளை, ரங்கிரி சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதிரடியாக ஆரம்பித்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 27(11) ஓட்டங்களை பெற்று அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த அஞ்சலோ பெரேரா, கிளன் பிலிப்ஸ் ஆகியயோர் 86 ஓட்டங்களை இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அஞ்சலோ பெரேரா அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் தலைக்கவச முன் பாதுகாப்பு கம்பிக்குள் பந்து தாக்க மைதானத்தை விட்டு வெளியேறினார். 34(30) ஓட்டங்களை அவர் பெற்றார்.
கிளன் பிலிப்ஸ் தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடினார். தொடர்ச்சியான மூன்றாவது அரைச்சதத்தை அவர் பெற்றுக்கொண்டார். திசர பெரேரா 13(09) ஓட்டங்களுடன் ரப்ரைஸ் ஷம்ஸியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறிது இடைவெளியில் கிளன் பிலிப்ஸ் அஷ்மதுல்லா ஒமர்ஷாயின் பந்துவீச்சில் 58(32) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சதீர சமரவிக்ரம 07(08) ஓட்டங்களுடன் அஷ்மதுல்லா ஒமர்ஷாயின் பந்துவீச்சில் வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த வரத்தில் ஷதாப் கான் முதற் பந்திலேயே பேபியன் அலனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் அதிரடி நிகழ்த்திய சாமிக்க கருணாரட்ண 09(09) ஓட்டங்களுடன் ப்ரமோட் மதுஷானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இறுதி நேரத்தில் டுனித் வெல்லாலகே, டஸ்கின் அஹமட் ஆகியோர் இணைந்து பெற்ற ஓட்டங்கள் மூலம் கொழும்பு அணி சவால் வழங்கக்கூடிய இலக்கை தொட்டது.
ஆர்மபத்தில் வேகமாக கொழும்பு அணி துடுப்பாடிய போதும், மத்தியவரிசை விக்கெட்களை யாழ் அணியினர் கைப்பற்ற கொழும்பு அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. 20 ஓவர்களில் 08 விக்கெட்ளை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.
அசித்த பெர்னாண்டோ 4 ஓவர்கள் பந்துவீசி ஓட்டங்களை வழங்கி விக்கெட்களை கைப்பற்றினார். ரப்ரைஸ் ஷம்ஸி ஓவர்களில் ஓட்டங்களை வழங்கி விக்கெட்களை கைப்பற்றினார். பேபியன் அலன் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார். அஷ்மதுல்லா ஒமர்ஷாய் 4 ஓவர்களில் 31 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார். ப்ரமோட் மதுஷான் 4 ஓவர்களில் 41 ஓட்டங்களை வழங்கி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய யாழ் அணியின் முதலிரு விக்கெட்களும் அடுத்தடுத்து வேகமாக வீழ்த்தப்பட்டது. அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் ரில்லி ரொசௌவ் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு கைகொடுத்தனர். இவர்களின் துடுப்பாட்டத்தில் 2 பிடிகள் விக்கெட் காப்பாளர் ரஹ்மனுல்லா குர்பாசினால் தவறவிடப்பட்டது. அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டமிழந்ததுடன் ரில்லி ரொசௌவின் இலகுவான பிடி விக்கெட் காப்பாளர் குர்பாசினால் தவறவிடப்பட்டது. அதன் பின்னர் ரில்லி ரொசௌவ் அதிரடியாக அவரது 3 ஆவது சதத்தை பெற்றுக்கொண்டார்.
யாழ் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 190 ஓட்டங்களை பெற்றது. இதில் ரில்லி ரொசௌவ் ஆட்டமிழக்காமல் 108(50) ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 58(35) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டுனித் வெல்லாலகே, தஸ்கின் அஹமட், ஷதாப் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினார்கள்.