கறுவாச் செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்

முதன்முறையாக கறுவாச் செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்
அதன் பிரதான அலுவலகத்தை காலி கரந்தெனியவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.

சரியான பொருளாதார முறையின் மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டாலும் பெற்ற வெற்றிகளை இழக்க நேரிடும்.
நாட்டில் கறுவா பயிர்ச் செய்கையை மீண்டும் முன்னேற்றி ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காலி கரந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தை நேற்று (10.07 ) பிற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அந்த பொய்களில் சிக்கினால் நாடு மீண்டும் நிரந்தரமாக பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் எனவும் சுட்டிக் காட்டினார்.

இந்த நாட்டில் முதல் தடவையாக கறுவா அபிவிருத்தி திணைக்களம் என்ற புதிய திணைக்களத்தை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் வகையில் அதன் பிரதான அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

கறுவா கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக தயாரிக்கப்பட்ட பத்தாண்டு கால வரைபடம் மற்றும் கறுவாச் செய்கை தொடர்பில் தயாரிக்கப்பட்ட “கறுவா கையேடு” தொழில்நுட்ப பிரசுரமும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட கறுவா தொழில் முயற்சியாளர்களுக்கு GAP மற்றும் GI சான்றிதழ்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

”200 ஆண்டுகளுக்குப் பிறகு கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தை ஆரம்பித்திருக்கிறோம். அதன்படி, நாட்டில் கறுவாச் செய்கையை மேம்படுத்தும் பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மீண்டும் கறுவாச் செய்கையை அபிவிருத்தி செய்வது இத்திணைக்களத்தின் பொறுப்பாகும். முதலில் கறுவா உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அங்கு, ஒவ்வொரு ஏக்கரிலிருந்தும் அதிகபட்ச உற்பத்தியைப் பெற வேண்டும். மேலும், குறைந்த தரத்திலான கறுவாவுக்குப் பதிலாக உயர்தரத்திலான கறுவா வகைகளை வளர்க்க வேண்டும்.

மேலும், கறுவா பயிரிடும் நிலப் பரப்பை அதிகரிக்க வேண்டும். அரசாங்கம் புதிய காணிகளை வழங்குவதற்கும் அவர்களின் நிலத்தில் ஏனைய பயிர்களுடன் கறுவாவைப் பயிரிடுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் கறுவா உற்பத்தியை மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கலாம்.

மேலும் கறுவா விற்பனையை அதிகரிக்க வேண்டும். விற்பனை இல்லாமல் உற்பத்தியை அதிகரிப்பதில் எந்தப் பயனும் இல்லை. எனவே, விற்பனையை அதிகரிக்கத் தேவையான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும். நிறுவனங்கள் அந்தப் பொறுப்பை ஏற்குமானால் அரசாங்கம் அவர்களுக்கு ஒத்துழைக்க எதிர்பார்க்கிறது.

எனவே, புதிய சந்தை வாய்ப்புகளைப்பெற்று முன்னேற வேண்டும். கரந்தெனிய பிரதேச கறுவா அபிவிருத்தி நிலையமாக இந்த நிறுவனத்தை மாற்ற எதிர்பார்த்துள்ளோம். பழைய முறைப்படி அன்றி நவீன முறைப்படி இந்த விவகாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தைத் தேடி நாம் கடந்த காலத்தை அடைந்திருக்கிறோம்.

இறக்குமதிப் பொருளாதாரத்தில் நீடித்தது தான் நமது நாடு வங்குரோத்தடைவதற்கு முக்கிய காரணமாகும். இறக்குமதிக்காக பெரிய அளவில் கடன் வாங்கினோம். சரியான பொருளாதாரக் கொள்கைகளால், இன்று நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட முடிந்தது. அத்துடன் நாம் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்கள் குறைக்கப்பட்டு 2043 ஆம் ஆண்டு வரை கடனை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாம் செல்லவில்லை என்றால் இன்னும் 15 வருடங்களில் நமது நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். அப்படியானால், நாம் விரைவில் ஒரு புதிய பொருளாதாரக் கட்டமைப்புக்கு செல்ல வேண்டும். அங்கு ஏற்றுமதி பொருளாதாரம் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டும்.

அன்று நாம் உலகிற்கே கறுவாவை கொடுத்தோம். இப்போது நாம் அந்த நிலைமைக்குத் திரும்ப வேண்டும். அக்காலத்தில் புத்தளத்திலிருந்து ஹம்பாந்தோட்டை வரை கறுவா பயிரிடப்பட்டது. அந்தச் செயற்பாடுகளை திட்டமிட்ட அடிப்படையில் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளைப் பெறவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இரண்டு வருடங்களுக்கு முன் நாட்டில் நிலவிய நிலைமையைச் சொல்லத் தேவையில்லை. இந்த நாட்டை மீட்க முடியாது என்று சிலர் கூறினர். நான் பேராசையில் ஆட்சிக்கு வந்தாக சிலர் கூறினர். எப்படியோ நாம் நாட்டை மீட்டு விட்டோம். நாம் சரியான பாதையில் செல்லாவிட்டால், இந்த வெற்றி நம் கையிலிருந்து நழுவக்கூடும். இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வழியை நாம் இப்போது காட்டியுள்ளோம். ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விடயங்களைச் சொல்கிறார்கள். பல்வேறு சுவர்க்கலோக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் நாட்டின் வெற்றியை எவ்வாறு பாதுகாத்து முன்னேறுவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே இன்னும் 10 வருடங்கள் இந்த சரியான பாதையில் சென்றால் எந்த பிரச்சினையும் இல்லாமல் அபிவிருத்தி அடைய வாய்ப்பு இருக்கிறது” எனவும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply