போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக முன்நிற்க மாட்டேன் – எதிர்கட்சித் தலைவர்

நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் பல பாரதூரமான பிரச்சினைகள் எழுந்துள்ளதோடு, சமூகம் எங்கும் வன்முறைகள் தலைவிரித்தாடி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (11.07) கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச,

நாட்டு மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தை அரசியலாக்க நான் ஒருபோதும் முயற்சிக்க மாட்டேன்.

சமூகத்தில் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும். இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு அரசாங்கம் எடுத்துள்ள அல்லது முன்வைக்கும் தீர்வு என்ன?

சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதன் மூலம் வன்முறையை ஒழிக்க எதிர்க்கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும். வன்முறைகளை தடுப்பதற்கு அரசாங்கம் கொண்டுள்ள திட்டம் என்ன?

இது குறித்து பேசுவதற்கு நான் பயப்படவில்லை. இது பேசப்பட வேண்டிய தலைப்பு தான். வன்முறைகள் காரணமாக நாட்டின் பொது மக்கள் பல பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக பாரிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறான வன்முறைகளை வைத்துக் கொண்டு ஒரு நாட்டால் முன்னேற முடியாது.

இந்தப் பிரச்சினை சுற்றுலாத் துறையையும் முதலீட்டுத் துறையையும் பாதிக்கிறது. சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி வலுவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் ஒரே கருத்தில் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

அரசாங்கம் தனது பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். நாட்டில் நிலவும் வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தெளிவான, நிலையான தீர்வை வழங்க வேண்டும். நாட்டில் சட்டத்தின் ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்க்கட்சி தமது பூரண ஆதரவை வழங்கும். அதனை நான் பெற்றுத் தருகிறேன். மக்கள் பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாதாள உலகத்தினர், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக நான் ஒருபோதும் முன்நிற்க மாட்டேன். கடந்த காலங்களில் இடம்பெற்ற கப்பம் காரணமாக மினுவாங்கொடை பிரதேச வர்த்தகர்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர்.

அந்த வர்த்தகர்கள் சார்பாக அன்று நான் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினேன். பாராளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியதால், பாதுகாப்புப் படையினரின் தலையீட்டால் ஓரளவுக்கு இது குறைக்கப்பட்டாலும், இன்றும் கப்பம் கோரும் நடவடிக்கை நடந்தே வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம், மகேஸ்வரன் ஆகியோரைக் கொன்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கீத் நொயர், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்களை தாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். லசந்த விக்கிரமதுங்கவின் சிறந்த நண்பர் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார். என்றாலும் லசந்த விக்ரமதுங்கவிற்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை” என்றும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply