சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில், இன்று(13.07) நடைபெற்ற 4வது போட்டியில் அபார வெற்றியீட்டிய இந்திய அணி தொடரை தன்வசப்படுத்திக் கொண்டது.
சிம்பாப்வே, ஹராரேவில் இன்று(13.07) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சிம்பாப்வே அணி சார்பில், அணித் தலைவர் சிக்கந்தர் ராசா 46(28) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் கலீல் அஹமட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
153 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 15.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை கடந்தது. இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் 93(53) ஓட்டங்களையும், அணித் தலைவர் சுப்மன் கில் 58(39) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, இந்திய அணி 10 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியதுடன், சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் 3-1 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றியது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ஜெய்ஸ்வால் தெரிவு செய்யப்பட்டார்.
இந்திய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் 5வதும் இறுதியுமான போட்டி நாளை(14.07) நடைபெறவுள்ளது.