பாடசாலைகளை முன்னேற்ற விசேட செயலணி

திறமையாளர்களைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கிய முக்கியமான வரலாற்றை எமது நாடு கொண்டுள்ளதென
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 310 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கொழும்பு,
அவிசாவளை, சிதாவக, கனஹேன, பொரலுகொட மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (14.07) இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை நூலகத்திற்குத் தேவையான ஆங்கில நூல்களைக் கொள்வனவு செய்து கொள்வதற்கு பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்

கல்ஹானர் எழுதிய இராஜதரங்கிணி கவிதை நூலில் காஷ்மீரின் சரித்திரத்தின்படி,காஷ்மீரை ஆண்ட ஜெயபீடன் என்ற அரசன்,
ரக்ஷயா எனப்படும் 5 நீர்ப்பாசனப் பொறியாளர்களை இலங்கையிலிருந்து காஷ்மீருக்கு அழைத்துச் சென்று காஷ்மீரில் குளங்களை நிர்மாணித்து,
காஷ்மீரில் கோட்டைகளைக் கூட நிர்மாணித்துள்ளனர்.

அநுராதபுர காலத்தில் எமது நாடு சர்வதேச கல்வியின் கேந்திரஸ்தானமாக திகழ்ந்தது.
மகாவிகாரை, ஜேதவனய, அபயகிரிய விகாரைகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட
பெரும் கல்வி நிலையங்களில் வெளிநாட்டிலிருந்தும் துறவிகள் கூட இங்கு வந்து கல்வி கற்றதாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பண்டைய வரலாறு தொட்டு நமது நாடு கல்வியின் கேந்திர மையமாக இருந்து வந்தது.

இதன் பிரகாரம், பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு, அரச,
தனியார் மற்றும் அரச சாரா திட்டங்களின் மூலம் நமது நாட்டை நவீன உலகில் பெரும்
கல்வி மையமாக மாற்றுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று, தொழில்நுட்பம் நொடிக்கு நொடி முன்னேற்றம் கண்டு,
ஒவ்வொரு துறையிலும் புதிய முறைகள் மற்றும் புதிய உத்திகள், நடைமுறைகள் நவீனப்பட்டு வருகின்றன.
அறிவை மையமாகக் கொண்ட உலகில் புதிய யோசனைகள்,
புதிய படைப்புகள் மற்றும் புதிய துறைகள் மூலம் மேலும் மேலும் அறிவு விரிவாக்கம் கண்டு வரும் வேளையில்,
புதிய உலகிற்கு ஏற்ப நமது நாட்டையும் அறிவை மையமாகக் கொண்ட நாடாகவும்,
ஸ்மார்ட் நாடாகவும், அறிவை மையமாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தியையும் உருவாக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

உலகின் முக்கிய புதிய போக்குகளுக்கு ஏற்ப முன்முயற்சியை வழங்கும் ஒரு
பாடத்திட்டத்தை எமது நாட்டில் கொண்டு வர வேண்டும்.
காலாவதியான மனப்பாட கற்றல் முறைக்குப் பதிலாக புதிய கல்வித் திட்டத்தின் மூலம் நவீன தலைமுறையை உருவாக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். பாடத்திட்டத்திற்கு அழகியல் துறை தேவையற்றது என்று தான் ஒருபோதும் கருதவில்லை.

சிலர் அழகியல் துறையை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அது தவறான நிலைப்பாடாகும்.
அழகியல் துறை மிகவும் முக்கியமானதாகும். மாறும் உலகில் புதிய போக்குக்கு ஏற்ப நாமும் மாற்றங்களை ஏற்படுத்தி
புதிய வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

போதைப்பொருள், சிகரெட், மதுவுக்கு அடிமையாகாத நாகரீகமான, நீதியான, நல்லொழுக்கமுள்ள,
விழுமியங்களைப் பேணும், அறிவொளி கொண்ட தலைமுறையை உருவாக்குவதற்கு இந்த கல்வித் திட்டத்தில்
நாம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

இலங்கையை உலக அளவில் முதல் ஸ்தானத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே
ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வர,
எமது கல்வியையும் முதல் இடத்திற்கு கொண்டு வர வேண்டும்.

இன்று இலவசக் கல்விக்கு பல அச்சுறுத்தல்களும் சவால்களும் விடுக்கப்படுகின்றன.
வளப்பற்றாக்குறையால் இலவசக் கல்வி வீழ்ச்சியடைந்து வருவதால்,
பாரம்பரியக் கட்டமைப்பிலிருந்து கொண்டு கல்வியைக் கட்டியெழுப்ப முடியாது.

எனவே இந்த நோக்கத்திற்காக புதிய வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.
இலவசக் கல்வியை முன்னெப்போதையும் விடப் பாதுகாத்து நவீனமயமான கல்வி முறையை ஏற்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித்
தலைவர் தெரிவித்தார்.

அனைவரும் கைகோர்த்து, அரசியல் இலக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கல்வியை வலுப்படுத்தும் இலக்குகளை
முன்னெடுக்க ஒன்றிணைய வேண்டும். பாடசாலைகளை முன்னேற்றுவதற்குத் தனியான செயலணி ஒன்று நிறுவப்படும்.
அதை ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply