‘சிங்கபாகு’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியமை தொடர்பில் குறித்த திரைப்பட இயக்குநரும் இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவருமான சோமரத்ன திஸாநாயக்க, இலங்கையிலுள்ள திரையரங்குகளுக்குள் கைத்தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் இந்த முறையை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என நேற்று(16.07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளுக்குள் கைத்தொலைபேசியை பயன்படுத்தும் போது பார்வையாளர்களின் கவனம் சிதறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதால், கைத்தொலைபேசிகளை திரையரங்குகளுக்குள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரையரங்கினுள் திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவேற்றியமை தொடர்பில் கருத்துக்களை வெளியிடும் போதே திரைப்பட இயக்குநர் சோமரத்ன திஸாநாயக்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் வெளியாகிய பிரபல சிங்கள திரைப்படமான ‘சிங்கபாகு’ திரைப்படத்தை, காணொளியாக பதிவு செய்து யூடியூப்பில் வெளியிட்ட குற்றச்சாட்டில் 24 வயதுடைய இளைஞன் கடந்த 11ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். கண்டி, கட்டுகஸ்தோட்டை சீகிரி திரையரங்கில் குறித்த திரைப்படத்தை காணொளியாக பதிவு செய்யப்பட்டிருந்தது.