முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை மீளப்பெறுவதாக அவர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
காமினி அமரசேகர, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று(17.07) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டிய தேவை தமது சேவைபெறுனருக்கு இல்லையென மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், மனு மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தெரிவித்தனர்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உரிய ஒழுக்காற்று விசாரணையேனும் நடத்தாமல் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் சட்டக் கோட்பாடு மீறப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மனுவின் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.