ஏழு அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதால் நோயாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
44 வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில், 7 இயந்திரங்கள் முற்றிலும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி பொது வைத்தியசாலை, கரவனெல்ல ஆதார வைத்தியசாலை, எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலை, ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் களுத்துறை பொது வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நிலையில் CT ஸ்கேன் பரிசோதனைக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு நோயாளர்களை இடமாற்றம் செய்வதானால் செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
CT ஸ்கேன் இயந்திரங்களுள் சில இயந்திரங்கள் செயலிழந்து பல வருடங்களுக்கு கடந்துள்ளதாகவும் அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
கரவனெல்ல ஆதார வைத்தியசாலையிலுள்ள நோயளர்களை CT ஸ்கேன் பரிசோதனைக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு மாதாந்தம் சுமார் 3 தொடக்கம் 4 மில்லியன் ரூபா செலவு செய்யப்படுவதாகவும் சானக தர்மவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
புள்ளிவிபரங்களின்படி, மற்றுமொரு வைத்தியசாலையும் இதே காரணத்திற்காக 5 மாதங்களில் 15 மில்லியன் ரூபாவினை செலவு செய்துள்ளதாகவும் அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.