LPL: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் அணி

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு கோல் மார்வல்ஸ் அணி தகுதி பெற்றுக்கொண்டது. ஜப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான 1வது Qualifier போட்டியில் வெற்றியீட்டிய காலி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 

தரவரிசையில் முறையே முதல் 2 இடங்களிலிருந்த காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகள் கொழும்பில் இன்று(18.07) நடைபெற்ற  1வது Qualifier போட்டியில் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க களத்திற்கு வந்த ரிலி ரொசோவ்,  குஷல் மென்டிசுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்தார். 

ரிலி ரொசோவ் 40(22) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க களத்திற்கு வந்த அவிஷ்க பெர்னாண்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். குஷல் மென்டிஸ் 46(39) ஓட்டங்களுக்கும், அவிஷ்க பெர்னாண்டோ 52(33) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, களத்திற்கு வந்த ஏனைய வீரர்கள் பிரகாசிக்க தவறியிருந்தனர். 

20 ஓவர்கள் நிறைவில் யாழ்ப்பாணம் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. காலி அணி சார்பில் பந்து வீச்சில் டுவைன் ப்ரட்டோரியஸ் 4 விக்கெட்டுக்களையும், இசுரு உதான 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர். 

178 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த காலி அணியின் நிரோஷன் டிக்வெல்ல 9(4) ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறம் அலெக்ஸ் ஹேல்ஸ் அணிக்காக 36(21) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். 

அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்க, ரிம் ஷெய்பேர்டுடன் இணைந்த ஜனித் லியனகே அணியை வெற்றியிலக்கை நோக்கி கொண்டு சென்றார். ஜனித் லியனகே 56(36) ஒட்டங்களுக்கு ஆட்டமிழக்க, ரிம் ஷெய்பேர்ட் ஆட்டமிழக்காமல் 62(41) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

காலி அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்து, லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிப் பெற்றுக்கொண்டது. போட்டியின் ஆட்ட நாயகனாக காலி அணியின் டுவைன் ப்ரட்டோரியஸ் தெரிவு செய்யப்பட்டார். 

இன்றைய போட்டியில் தோல்வியடைந்த யாழ்ப்பாணம் அணி, கொழும்பு மற்றும் கண்டி அணிகளுக்கு இடையிலான Eliminator போட்டியில் வெற்றிப் பெறும் அணியுடன் நாளை(19.07) நடைபெறவுள்ள 2வது Qualifier போட்டியில் மோதவுள்ளது. ‘

Social Share

Leave a Reply