லயன் அறைகளை புதிய கிராமங்களாக அறிவிப்பது கின்னஸ் சாதனை – உதய குமார்

200 வருடங்களுக்கு பழமையான லயன் அறைகளை புதிய கிராமங்கள் என அறிவிப்பது
நவீன உலகத்தின் மிகப்பெரிய ஏமாற்றுத் திட்டம் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார்
தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (23.07) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள் மேலெழும்போது பெருந்தோட்ட
“மலையக மக்களினுடைய பிரச்சினைகள் மூடி மறைக்கப்படுவதும் – திசை திருப்பப்படுவதும் வழமையாக மாறிவிட்டது.”

குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

“ஆசை காட்டி மோசம் செய்வது போல” 1700 ரூபாய் என்ற ஆசையை இந்த அரசாங்கமே
காட்டிவிட்டு தற்போது இதே அரசாங்கம் அந்த மக்களுக்கு மோசம் செய்து வருகிறது.

இந்த சம்பள உயர்வு பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக தற்போது
புதிதாக “தோட்ட லயன் அறைகளை புதிய கிராமங்களாக அறிவிக்கும் ஒரு கின்னஸ் சாதனை திட்டத்தை ”
இந்த ஜனாதிபதியும் அவரோடு கூட்டு சேர்ந்து இருக்கின்ற தரப்பினரும் முன் வைத்துள்ளனர்.

உலகிலே எந்த இடத்திலும் நடக்காத ஒரு திட்டம் இது என்பதால்
தான் இதனை “கின்னஸ் சாதனை திட்டம்“ என்று சொல்ல வேண்டி இருக்கிறது.

200 வருடங்களுக்கு பழமையான லயன் அறைகளை அப்படியே வைத்து அதில் எந்தவிதமான மாற்றங்களும் திருத்தங்களும் செய்யாமல் அவற்றை புதிய கிராமங்கள் என
அறிவிப்பு செய்வது “நவீன உலகத்தின் மிகப்பெரிய ஏமாற்று திட்டம்” என்பதை இந்த சபையிலே எடுத்துக் கூற கடமைப்பட்டுள்ளேன்.

இது தோட்டம் அல்லது லயன் என்ற வார்த்தையை கிராமம் என்று வார்த்தை மாற்றம் மட்டுமே
“எமது மக்கள் எதிர்ப்பார்ப்பது வாழ்க்கை மாற்றமே தவிர வார்த்தை மாற்றம் அல்ல”
என்பதை மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

உங்களுடைய கனவு ஒரு காலமும் பலிக்காது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மலையக
மக்களும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய நாமும் துளி அளவும் இடம் அளிக்க மாட்டோம்.

இதனை எதிர்ப்பதற்கு எந்த கட்டத்திற்கு வேண்டுமானாலும் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பெருந்தோட்ட மலையக மக்களின் எதிர்பார்ப்பு அவர்களுக்கு காணி உரிமை மற்றும் வீட்டு உரிமையாகும்.
அதனை சூனியம் ஆக்கும் வகையில் – குழி தோண்டி புதைக்கும் வகையில்
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கையில அனாவசிய குழப்பங்களை ஏற்படுத்தாது
இருக்குமாறு இந்த அரசாங்கத்தை கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version