மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு முதலிடம்
இலங்கை, தம்புள்ளை சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று முதலிடத்தோடு நிறைவு செய்துள்ளது. விளையாடிய மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. குழு B இல் பங்களாதேஷ் அணி இரண்டாமிடத்தை பெற்று அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. மூன்றாமிடத்தை தாய்லாந்து அணியும், நான்காமிடத்தை மலேசிய அணியும் பெற்றுக்கொண்டன.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய தாய்லாந்து அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் நன்னாபாட் கொஞ்சரோன்காய் 47 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். திப்பாட்சா புத்தவோங் 13 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 2 விக்கெட்களையும், அச்சிலா குலசூரியா, சுகந்திகா குமாரி, இனோசி பிரியதர்சினி, சாமரி அத்தப்பத்து ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 11.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 94 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அதிரடி நிகழ்த்திய சமாரி 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றி இலகுவானது. அவரோடு ஜோடி சேர்ந்து களமிறங்கிய விஷ்மி குணரட்ன 38 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்தியா மகளிர் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி நாளை மறுதினம் 2 மணிக்கும், இலங்கை மகளிர், பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடைடயிலான போட்டி மாலை 7 மணிக்கும் நடைபெறவுள்ளது.
