இரண்டாம் போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் தடுமாற்றம்
இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி இன்றும் துடுப்பாட்டத்தில் தடுமாறியுள்ளது.
முதற் பந்திலேயே பத்தும் நிஸ்ஸங்கவின் விக்கெட்டை இழந்து தடுமாறியது இலங்கை அணி. அவிஷ்க பெர்னாண்டோ, குஷல் மென்டிஸ் இணைந்து 74 ஓட்டங்களை பெற்று அணியை மீட்டு எடுத்தனர். ஆனால் அவர்கள் எடுத்துக்கொடுத்த ஆரம்பத்தை மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் தவற விட்டனர். அவிஷ்க பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். இருவரது விக்கெட்களையும் வொசிங்டன் சுந்தர் கைப்பற்றினார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க ஆகியோர் ஓரளவு துடுப்பாடிய போதும் சதீர 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சரித் அசலங்க 25 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். டுனித் வெல்லாளகே, கமிந்து மென்டிஸ் ஆகியோர் 72 ஓட்டங்களை ஏழாவது விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். டுனித் 39 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். கமிந்து மென்டிஸ், அகில தனஞ்சய ஆகியோர் இறுதி நேரத்தில் ஓரளவு வேகமாக ஓட்டங்களை பெற்று கடந்த போட்டியின் ஓட்ட எண்ணிக்கையை கடந்தனர். கமிந்து மென்டிஸ் 40 ஓட்டங்களையும், அகில தனஞ்சய 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த ஓட்ட எண்ணிக்கை போராடக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருக்குமென நம்பப்படுகிறது.
இந்தியா அணியின் பந்துவீச்சில் வொசிங்டன் சுந்தர் 10 ஓவர்களில் 30 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 33 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களை கைப்பற்றினார். மொஹமட் சிராஜ், ஆர்ஷிப் சிங் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
கடந்த போட்டி இரு அணிகளுக்குமிடையில் சமநிலையில் நிறைவடைந்தது. விறு விறுப்பாக அந்தப் போட்டி நிறைவடைந்த நிலையில் இன்றைய போட்டி விறு விறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பிலும், மைதானப்பகுதியிலும் மழை பெய்யும் வாய்ப்பு கான்னப்படுகிறது. ஆனால் இதுவரை மழை பெய்யவில்லை.
அணி விபரம்
உபாதை காரணமாக வனிந்து ஹசரங்க வெளியேறியுள்ள நிலையில் ஜெப்ரி வன்டர்சாய் அவருக்கு பதிலாக சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார். மொஹமட் சிராஸ் நீக்கப்பட்டு கமிந்து மென்டிஸ் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது.
இலங்கை அணி: சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, டுனித் வெல்லாளஹே, அகில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ்
இந்தியா அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சிரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், மொஹமட் சிராஜ்