நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்திற்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் அந்த நிலையை தடுப்பது அனைத்து தொழில் வல்லுநர்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களுடன் மட்டக்களப்பு சன்சைன் ஹோட்டலில் நேற்று முன்தினம் (03.08) நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், மகளிர் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் ஆற்றலைக் கண்டறிந்து அதன் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை விளக்கிய ஜனாதிபதி , நிலாவெளி முதல் அறுகம்பை வரையிலான பிரதேசத்தை பிரதான சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்தல் மற்றும் 50 பாரிய ஹோட்டல்களை உருவாக்
குதல் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் விளக்கினார்.
இதனையடுத்து நேற்று (03) மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினருடனான சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.பிராந்திய விரிவான பொருளாதார கூட்டுமுயற்சியில் (RCEP) இணைந்து , தென்கிழக்காசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவது குறித்து விளக்கிய ஜனாதிபதி, நாட்டின் புதிய பொருளாதார
சீர்திருத்த செயல்முறை மற்றும் சட்ட திருத்தம் குறித்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடினார்.
சர்வதேச விமானங்கள் தரையிறங்கும் வகையில் ஹிங்குரக்கொட விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிரதேசங்களை பிரதான கல்வி மத்திய நிலையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் டி. சிவநாதன், செயலாளர் எச்.ஐ.அஜித் உள்ளிட்ட . சட்டத்தரணிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் செயற்பாட்டாளர்களின் சந்திப்பும் நேற்று (03) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் மற்றும் புத்துயிர் அளிக்கும் பிரதான பொருளாதார மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்கள் குறித்து சிவில் அமைப்புக்களின் ப
ிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கமளித்தார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவாலை விளக்கிய ஜனாதிபதி, நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடனான(IMF) உடன்படிக்கைகளுக்கு அமைவாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் வழங்கும் நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஒப்பந்தங்களை மாற்ற முயற்சிப்பதன் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நிதியுதவியை இழக்க நேரிடும் என்றும் தெரிவித்தார்.ஜஎம்எப் ஒப்பந்தங்களை மாற்றின
ால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
2035ஆம் ஆண்டுக்குள் இலங்கையை ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரமாக மாற்றும் திட்டத்தையும் தெளிபுபடுத்திய ஜனாதிபதி, அதற்காகவே பொருளாதார பரிமாற்றச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மாகாணங்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்திய ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கத்தின் சுமையை குறைத்து மாகாணங்களுக்கு அபிவிருத்தியை பகிர்ந்தளிக்கும் வகையில் மாகாண சபைகளை பலப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வி. கனகசிங்கம், சிவில் அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் எஸ். மாமாங்கராஜா, உப தலைவர் எம். செல்வராஜா உட்பட சிவில் அமைப்புக்களின் ஒன்றிய உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரும் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்