மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனுக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்குமாறு கோரி முன்வைத்த மனு இன்று(07.08) மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி வைத்தியசாலை சர்ச்சைகளை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் கடந்த 3ம் திகதி மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 2ம் திகதி மன்னார் பொது வைத்தியசாலைக்குள் அத்துமீறி புகுந்ததாக மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் மேற்கொண்ட புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக 7 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் உறுதி செய்திருந்தனர். வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களினால் இவ்வாறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அண்மையில் பிள்ளை ஒன்றை பிரசவித்த பெண் ஒருவர், இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் விசாரணைகளை நடாத்திவரும் நிலையில், கடந்த 2ம் திகதி இரவு 9.00 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர் அர்ச்சுனா அனுமதியின்றி உள் நுழைந்து கடமையிலிருந்த வைத்தியர் அடங்கலாக பணியாளர்களை அச்சுறுத்தியதாகவும், பெண்கள் விடுதிக்குள் நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டதாவும் அது தொடர்பில் மன்னார் பொலிஸில் தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வி மீடியாவுக்கு மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் அஸாத் தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா மன்னார் மாவட்ட நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். கடந்த 5ம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இருப்பினும், இன்று(07.08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்.