
வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (08.08) நடைபெற்றது. ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
மாகாண சுகாதார துறையில் காணப்படும் சிக்கல்கள், மேற்கொள்ள வேண்டிய பொறிமுறை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஆளுநர், அந்த பிரிவிற்கான ஆளணியை நியமித்து உரிய பயிற்சிகளை வழங்குமாறும் ஆலோசனை வழங்கினார்.அத்துடன் வைத்தியசாலைகளை ஒருங்கிணைப்பதற்கான தரவுப் பொறிமுறை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். சுகாதார துறைக்கு தேவையான ஆளணி, வளப்பற்றாக்குறை, தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்பிக்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ் பணிப்புரை விடுத்தார்.