
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை 3 குற்றச்சாட்டுகளை உறுதி செய்துள்ளது. இந்த மூன்று குற்றச்சாட்டுகளுக்காவும் அவர் தண்டிக்கப்பட்டுளார். ஆனாலும் அவருக்கு என்ன தண்டனை என்பதனை சர்வதேசக் கிரிக்கெட் பேரவை அறிவிக்கவில்லை.
பிரவீன் ஜெயவிக்ரம மீது பின்வரும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன,
பிரிவு 2.4.4 – சர்வதேசப் போட்டிகளில் போட்டி நிர்ணயம் செய்வதற்கு அவரை அணுகியமை தொடர்பில் உடனடியாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு உடனடியாக அறிவிக்காமல் தாமதப்படுத்தியமை.
பிரிவு 2.4.4 – 2021ம் ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் போட்டி நிர்ணயம் செய்வதற்கு மற்றுமொரு வீரரை அணுகுமாறு கிடைக்கப்பெற்ற அழைப்பு தொடர்பில் தாமதமின்றி ஊழல் தடுப்பு பிரிவுக்கு அறிவிக்க தவறியமை.
பிரிவு 2.4.7 – விசாரணைகளை தடுக்கும் நோக்கில், ஊழலில் ஈடுபடுவதற்கான அழைப்புக்கள் தொடர்பான குறுஞ்செய்திகளை நீக்கியமை.
சர்வதேச போட்டிகள் மற்றும் லங்கா பிரீமியர் லீக் தொடர்பான குற்றசாட்டுகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் ஶ்ரீ லங்கா கிரிக்கெட் ஆகியன ஒப்புக் கொண்டுள்ளன.
கடந்த 6ம் திகதி முதல் 14 நாட்களுக்குள் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பதற்கு பிரவீன் ஜெயவிக்ரமவிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என சர்வதேசக் கிரிக்கெட் பேரவை ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.