வேட்புமனு தாக்கல் இன்று: விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் 

வேட்புமனு தாக்கல் இன்று: விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் 

கொழும்பு, இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்து இன்று(15.08) விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனை முன்னிட்டு, பாதுகாப்பு கடமைகளுக்காக மாத்திரம் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று(15.08) கையளிக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பு கடமைகளை மேற்கொள்வது, அமைதியை பேணுதல், விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என சில விசேட கடமைகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

விசேட போக்குவரத்தை கையாள்வதற்காக 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், இந்த பாதுகாப்பு கடமைகள் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக சரண மாவத்தையுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. இந்த காலப்பகுதியில் ஆயுர்வேத சந்தியிலிருந்து இராஜகிரிய சந்தி வரையான ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியூடாக கொழும்பிலிருந்து வௌியேறும் பகுதியில் வாகன போக்குவரத்து முற்றாக மூடப்பட்டவுள்ளது.

இதனால் ஶ்ரீ ஜயவர்தனபுர வீதியின் பொல்துவ சந்தி முதல் டி.எஸ்.சேனாநாயக்க சந்தி வரையான வீதியில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இராஜகிரிய சந்தியிலிருந்து கொட்டாவ வீதி, ஆயுர்வேத வீதி, பழைய வீதி, பொரளை சந்தி வரையான வீதியிலும் அத்தியாவசியத் தேவை நிமித்தம் பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply