அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரை அயர்லாந்து அணி கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றியீட்டிய அயர்லாந்து மகளிர் அணி தொடரை வென்றது.
தொடரின் இரண்டாவது போட் அயர்லாந்து, பெல்பாஸ்டில் இன்று(18.08) நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அயர்லாந்து அணி சார்பில் லியா பால் 81(101) ஓட்டங்களையும், ஆமி ஹண்டர் 66(71) ஓட்டங்களையும், ரெபேக்கா ஸ்டோகெல் ஆட்டமிழக்காமல் 53(61) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் அச்சினி குலசூர்யா, கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.
255 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் ஹர்ஷதா சமரவிக்ரம 105(124) ஓட்டங்களையும், கவிஷா டில்ஹாரி 53(45) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ஹர்ஷதா சமரவிக்ரம இலங்கை அணிக்காக சர்வதேச போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட முதலாவது சதம் இதுவாகும்.
அயர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் அர்லீன் கெல்லி 3 விக்கெட்டுக்களையும், ஜேன் மாகுவேர் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, அயர்லாந்து மகளிர் அணி 15 ஓட்டங்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதிமிருக்கும் நிலையில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகியாக அயர்லாந்து அணியின் லியா பால் தெரிவு செய்யப்பட்டார்.