
இந்தியாவின் கடனுதவியே இலங்கையை வரிசை யுகத்திலிருந்து மீட்டதென தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்
மனோ கணேசன் ரணிலின் சுயமுயற்சி எதுவும் இல்லையென தெரிவித்துள்ளார்.
மாவனல்ல, ருவன்வெல்ல ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன்
“இலங்கைக்கு தொடர் கடன் உதவி வழங்க வேண்டுமென இந்திய அரசு, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொள்கை ரீதியாக தீர்மானித்தது.
இவை ரணில் ஆட்சிக்கு வர முன்னர் தீர்மானிக்க பட்டவை.
அதன் பிறகு, 2022 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமராகவும், ஜூலை மாதம் ஜனாதிபதியாகவும் ரணில் பதவிகளை ஏற்றார்.
அவர் பதவிக்கு வந்து இவற்றை பயன்படுத்தினார்.
ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றை கொண்டு வரவில்லை.
இந்திய அரசின் உதவிகள் காரணமாகவே நாட்டில் அத்தியாவாசிய பொருள் வரிசைகள் நின்றன. மின் வெட்டு இல்லாமல் ஆனது. விவசாயத்துக்கு தேவையான உரம் கூட ஓமன் நாட்டிலிருந்து இந்திய கடனுதவி நிதி மூலம் பெற இந்திய அரசு அனுமதித்தது.
இதுதான் உண்மை. இதை மறுக்க முடியுமா என சரடு விடுபவர்களுக்கும், உண்மை தெரியாமல் பேசி திரிபவர்களுக்கும் நான் சவால் விடுகிறேன்.
இந்திய தேசம்தான், எமது நாட்டை காப்பாற்றியது என்ற அடிப்படை உண்மையை மறைத்து, தான் நாட்டை காப்பாற்றியது போல் போகும் இடமெல்லாம் ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார்.
இந்த பொய்யை அவரது எடுபிடிகளும் கூறி வருகிறார்கள். நாட்டில் ஒரு தரப்பினர் உண்மை தெரியாமல் இதை நம்புகிறார்கள்.
இலங்கை ரூபா பெறுமதியில், 120,000 இலட்சம் ரூபாய்களுக்கு நிகரான 400 கோடி அமெரிக்கா டொலர் தொடர் கடன் நிதி உதவியை இந்திய ஒன்றிய அரசு எமது நாட்டுக்கு வழங்கியது. அதேபோல் 400 கோடி இலங்கை ரூபா பெறுமதியான உணவு பொருட்களை இந்திய தமிழ்நாடு மாநில அரசு எமக்கு வழங்கியது.
ரணில் பதவிக்கு வந்து அவற்றை பயன்படுத்தினார். ரணில் பதவிக்கு வந்து சுய முயற்சியால் இவற்றை கொண்டு வரவில்லை. ஆனால், இவை தனது சாதனைகள் என ரணில் வழமை போல் நரித்தனமாக கூறி வருகிறார்.