
அண்மையில் ஜனாதிபதி ஆலோசகர்களான முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், குறித்த இருவரும் தேர்தலுக்கான தமது சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதை அவதானித்து வருவதாகத் தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக இருக்கின்ற போதும், அவருக்கு அரசியலமைப்புக்கு அமைய நியமனங்களை வழங்குவதற்கான அதிகாரம் காணப்படுவதாகத் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் முன்னாள் அமைச்சர்கள் இருவரும், தங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் மற்றும் ஏனைய சலுகைகளை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்துவது சட்டத்தை மீறும் செயற்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் தேர்தல் நோக்கங்களுக்காகச் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்கின்றனரா என்பதை உறுதிப்படுத்தத் தேசிய தேர்தல் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தி வருவதாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.