“ரணிலினால் என்னவெல்லாம் இயலும்”-வஞ்சகப் புகழ்ச்சி செய்த மரிக்கார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது தேர்தல் கருப்பொருளாக “இயலும் ஸ்ரீலங்கா’வை பயன்படுத்துகிறார். அவரால் மக்கள் மீது பாரிய வரிச்சுமையை சுமத்த இயலும். பொருட்களின் விலையை விண்ணுக்கு உயர்த்த இயலும். மின்சார கட்டணத்தை 300 வீதம் அதிகரிக்க இயலும். மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்க இயலும். தரமற்ற மருந்துகளை கொண்டுவர இயலும். அதன் மூலம் திருட இயலும். எரிபொருள், நிலக்கரி போன்றவற்றில் திருட இயலும். அமைச்சரவை அனுமதி பெற்று VS ஒப்பந்தத்தின் மூலம் 90000 கோடி ரூபா(2.75 பில்லியன்டொலர்) திருட முயற்சி செய்ய இயலும்.

(2.75 பில்லியன்டொலரை பார்த்ததும், இலங்கை நாட்டை மீட்க சர்வதேச நாணய நிதியம் வழங்கும் தொகை 2.9 பில்லியன் டொலர். இவ்வாறு ஊழல் செய்யும் தொகையை பார்க்கும் போது 3 பில்லியன் டொலர்களுக்கு மேல் ஏமாற்ற இயலும்: என அவருடை கருப்பொருளை வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் S.M மரிக்கார் வஞ்சகப் புகழ்ச்சி செய்துள்ளார். இன்று(26.08) ஐக்கிய மக்கள் கூட்டணியின் அலுவகலத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த செயலை அவர் செய்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

“பொருளாதரா வீழ்ச்சி கண்ட நாடு இன்னும் கடனை செலுத்தத் தொடங்கவில்லை. கடன் மறுசீரமைப்பு முடிந்ததும், கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க வேண்டும். கடனை செலுத்த, டொலர் வருமானம் அதிகரிக்க வேண்டும். டொலர் வருமானத்தை அதிகரிக்க அன்னிய நேரடி முதலீடு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதற்கு அரசு செயற்படவில்லை. முதலீட்டாளர்களுக்கு இலங்கைக்கு வந்து திட்டங்களைச் செய்வதில் நம்பிக்கை இல்லை. முதலீட்டாளர்களுக்கு அவர்களது முதலீட்டை மீள பெற முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. அத்தோடு கமிஷன் கொடுக்க வேண்டுமா என்ற சந்தேகம் உள்ளது” என மரிக்கார் தற்போதைய அரசாங்கம் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

“தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மோசமான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும், குற்றச்செயல்களுடன் சம்மந்தப்பட்ட பலர் சேர்ந்துள்ளனர். அழுக்கு உரக்குற்றச்சாட்டுக்காளான மகிந்தானந்த, நீர்கொழும்பு லான்சா, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை பெற்ற பிரசன்ன ரணதுங்க, உடதன்வின்ன கொலைக்குற்றச்சாட்டுக்குள்ளான லொஹான், பயாகலையில் தங்கச்சங்கிலி அறுத்த ரத்தரங், உர வழக்கில் சம்மந்தப்பட்ட SM, 2500 பந்துல, புடலங்காய் போன்ற பிரதமர் தினேஷ் குணவர்தன போன்றோர் இருக்கிறார்கள்.

தலதா மாளிகை மீது குண்டு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கருணா மற்றும் பிள்ளையான் போன்றோர் உள்ளார்கள். இன்னமும் பார் குமார் உள்ளார். பணப் பெட்டிகளுக்காக கட்சி தாவும் முஸ்லீம் அரசியல் வாதிகள் உள்ளனர், 1994 முதல் அரசாங்கங்களில் அமைச்சர் பதவிகளை வகித்தவர்கள் என ஊழல்வாதிகள் நிறைந்து போயுள்ளனர். இவர்கள் மட்டுமா? ரணில் ஜனாதிபதியானதும் பிரதமராக வருவதற்கு பார்த்துக்கொண்டுள்ள ரவி கருணாநாயக்கவும் உள்ளார். வஜிர, சாகல, அகில, ரங்க போன்ற மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களும் உள்ளனர்.

இலங்கையில் முதலீடுகளை கொண்டு வரவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கவும், வரிகளை குறைக்காமல் திருடவும் இவர்களால் இயலாது” என பாராளுமன்ற உறுப்பினர் SM மரிக்கார் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply