தமது ஆட்சியின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”நாட்டிலுள்ள மாணவர்களில் 810,000 மாணவர்கள் மந்த போசனையுடன் உள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. கர்ப்பிணித் தாய்மார் போசாக்கற்ற உணவையே உட்கொள்கின்றனர். உரிய தொழில் வாய்ப்பில்லை.
தொழிலின்றி வெளிநாடுகளுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது. வர்த்தகம் ஒன்றை முன்னெடுக்க முடியாத நிலையுள்ளது. கடன் பெற்றவர்களில் பெரும்பாலானோர் இன்று அதனை செலுத்த முடியாது தவித்து வருகின்றனர். சிலர் உயிரையும் மாய்த்துக் கொள்கின்றனர்.
நாங்கள் கட்டம் கட்டமாகப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம். அதன்மூலம் அனைவரின் வாழ்வும் சுபீட்சமடையும்” என அனுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.