ஐக்கிய மக்கள் கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், உதயகுமார் ஆகியோர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாகத் தெரிவித்த கருத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபதலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம்(30.08) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த வேலுசாமி இராதாகிருஷ்ணன்,
“கண்டியிலிருந்து ரணிலுடன் சென்று இணைந்து கொண்ட நபர், தன்னுடன் மற்றவர்களையும் அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றார். ஐக்கிய மக்கள் சக்தி என்பது நாங்கள் உருவாக்கிய கட்சி, ஆகவே நாம் எக்காரணத்திற்காகவும் கட்சியிலிருந்து வெளியே செல்ல மாட்டோம். தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வந்தால், தற்பொழுதுள்ள அமைச்சரவையே தொடர்ந்தும் செயற்படும். இதே அமைச்சரவையின் ஊழல் காரணமாகவே நாடு சீர்குலைந்தது. ஆகவே மீண்டும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்தால் 2022 ஏற்பட்ட நிலையே மீண்டும் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.