கடந்த 24 மணித்தியாலங்களில் வெவ்வேறு பிரதேசங்களில் மூன்று கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அனுராதபுரம், பரசங்கஸ்வெவ – பயிரிக்குளம பகுதியில் நேற்று(02.09) மாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது நண்பனின் வீட்டிலிருந்தபோது, அங்கு வந்த குழுவினருக்கும் நண்பனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், இரு தரப்பினரும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த நால்வர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, அவிசாவாளைப் பிரதேசத்தில் நேற்று(02.09) மாலை 43 வயதுடைய பெண் ஒருவர் கணவனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக சந்தேக நபர் பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ரத்கம பிரதேசத்தில் நேற்று(02.09) மாலை 25 வயதுடைய நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
சிறிகந்துரவத்தை பிரதேசத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த நபர், ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.