பொது வேட்பாளருக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பித்துள்ள நிலையில், தமது கட்சி கொள்கையான “இந்திய அரசியல் அமைப்பு முறை” எனும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாராளுக்கு தமது ஆதரவை வழங்குவோம் என தமிழர் விடுதலைக்கு கூட்டணி கட்சியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அதேவேளை “யாரோ இரண்டு பேர் தெரிவு செய்த தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க முடியாது எனவும், “தமிழ் பொது வேட்பாளரினால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?” எனவும் கேள்வி எழுப்பினார்.

வெறுமனே சிறிதளவு வாக்குகளுக்காகவும், பிரபலத்துக்காகவும் செய்யப்படும் செயல் இதுவெனவும் அவர் குற்றம் சுமத்தினார். அத்தோடு கடந்த காலங்களில் இவ்வாறு போட்டியிட்டவர்களினால் என்ன இலாபம் கிடைத்தது” எனவும் தெரிவித்தார். வி மீடியா ஆனந்தசங்கரியை தொடர்புகொண்டு கேட்டபோதே இந்த விடயங்களை அவர் தெரிவித்தார்.

தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் இவ்வாறு கூறியுள்ள நிலையில், அந்த கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து “தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடும் நிலையில் சிங்கள தலைவர்களுடன் பேசுவது உகந்தது அல்ல” என கூறியுள்ளார். இதன் மூலம் மறைமுக ஆதரவை பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு வழங்குவதாகவே தென்படுகிறது. அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அருட் தம்பிமுத்து இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஆனந்தசங்கரி அறிந்திருக்கவில்லை. அத்தோடு அருண் தம்பிமுத்து அவ்வாறு தெரிவித்திருக்க மாட்டார் எனவும், கட்சியின் முடிவு இந்திய அரசியல் அமைப்பு முறைக்கு ஆதரவு வழங்குவர்களுக்கே ஆதரவு என்பதனை உறுதியாக கூறினார்.

Social Share

Leave a Reply